ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, அரசூர், உக்கரம், கெம்பநாயக்கன்பாளையம், சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி உள்ளிட்டப் பகுதிகளில் அதிக அளவில் வாழை பயிரிடப்படுகிறது.
குறிப்பாக கதலி, நேந்திரன், ஜி9 உள்ளிட்ட ரகங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன. இந்நிலையில், நேற்று (மே.14) சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம், மில் மேடு, மல்ல நாயக்கனூர், காளி குளம் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது.
சூறாவளி காற்றின் வேகம் தாங்காமல் விவசாயிகள் பயிரிட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள நேந்திரன், கதலி, ஜி9, தேன் வாழை உள்ளிட்ட ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. வாழை குலை தள்ளிய நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தது.
தற்போது, சூறாவளி காற்றில் சிக்கி சேதமடைந்ததால், இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சேதமடைந்த வாழை மரங்களை தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்தை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்... விற்பனை தொடக்கம்!