ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகேயுள்ள செல்லப்பாளையம் பெரியதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது கணவர் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது ஒரே மகன் கதிர்வேல் உடன் இல்லாததால், தனியாக வசித்து வரும் நிலையில், தனக்குச் சொந்தமான 4 ½ ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
மூதாட்டியின் விவசாயத் தோட்டம் அருகே உள்ள பொதுக் கிணற்றில் மூன்று பேருக்கு பங்கு உள்ளது. இந்தக் கிணற்றில் பல ஆண்டுகளாக முறை வைத்து மூன்று தோட்டத்தினரும் மின்மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்து வருகின்றனர். இந்நிலையில், பக்கத்து தோட்டக்காரரான சண்முகம் என்பவர், சரஸ்வதி தண்ணீர் இறைக்க சென்றபோது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பை மீறி தண்ணீர் எடுத்து பாசனம் செய்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மூதாட்டியின் முறையின் போது சண்முகத்துடன் பலரும் வலுக்கட்டாயமாக மின்மோட்டாரை நிறுத்தியுள்ளனர். மேலும், வயது முதிர்ந்தோர் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதன் காரணமாக அச்சமடைந்த மூதாட்டி சரஸ்வதி, கடந்த 22ஆம் தேதி, இதுகுறித்து திங்களூர் காவல் நிலையத்திற்கு புகாரளிக்க சென்றபோது, அங்கு பணியில் இருந்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிசாமி, மரியாதைக்குறைவாக திட்டி வெளியே விரட்டியடித்துள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த மூதாட்டி சரஸ்வதி, தனது மகனுடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தனது புகாரை ஏற்க மறுத்த திங்களூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மீதும், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அருகாமைத் தோட்டத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளித்தார்.
இதையும் படிங்க: பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரையும் அருகில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து அமித்ஷா பேசலாமா? - ஸ்டாலின் கேள்வி