ஈரோடு: அரசுப்பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில், அனைத்து விஞ்ஞான பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால், குற்றவாளி விரைவில் பிடிபடுவார் என கோவை சரக டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அடுத்து உள்ள கொல்லம்பாளையம் வ.உ.சி வீதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் மனோகர்(62). இவரது மனைவி புவனேஸ்வரி(53), வைராபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 20ம் தேதி வீட்டின் படுக்கை அறையில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக கோவை சரக டிஐஜி சரவண சுந்தர் ஈரோடு தெற்கு காவல்நிலையத்திற்கு வருகை புரிந்தார்.
அதனை தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற டிஐஜி சரவணசுந்தர், அப்பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஐஜி சரவண சுந்தர், ஆசிரியை புவனேஸ்வரி கொலை வழக்கு சம்பந்தமாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டதோடு, இறந்தவரின் கணவர் மற்றும் உறவினர்களிடம் முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும் கொலைக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை என்பதால் குற்றவாளியை பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த வழக்கில் அனைத்து விஞ்ஞான பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார். கொலை நடந்த வீட்டில் இருந்த 65 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் களவு போகாமல் அப்படியே உள்ளதாகவும், வேறு ஏதேனும் காணாமல் போனதா என்பது குறித்தும் விசாரித்து வருவதாகவும் கூறினார்.
அதனைத்தொடர்ந்து, தெற்கு காவல்நிலையத்தில் உள்ள கோப்புகள் மற்றும் அறைகளை ஆய்வு மேற்கொண்ட அவர், மாவட்டத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின் போது, மாவட்ட காவல்துறை காண்காணிப்பாளர் ஜவஹர், நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலும், இந்த சம்பவத்தைப் போன்று ஈரோடு சித்தோடு அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் தொடர்புடைய மூவேந்தர் நகரை சேர்ந்த சரவணன் மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தை சேர்ந்த பாலு ஆகிய 2 பேரை, சித்தோடு காவல்நிலைய போலீசார் கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட 5 சவரன் தங்கநகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் ஈரோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப்போவது யார்? டைபிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதல்!