ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசு ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவரது மனைவி சர்மிளா. சென்னையில் அரசு ஊழியராக பணியாற்றி வந்தார்.
கரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதால், அரசு ஊழியர்கள் 30 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கார்த்திக் சென்னை சென்றுள்ளார்.
விபத்து
அரசு அலுவலங்கள் அடுத்த வாரம் செயல்படும் என அலுவலர்கள் தெரிவித்ததால் அவர் வீடு திரும்பியுள்ளார். வரும் வழியிலே கிருஷ்ணகிரியில் உள்ள தனது நண்பரான பர்கூரைச் சேர்ந்த கார்த்தி என்பவரை அழைத்து காரில் அம்மாப்பேட்டை அந்தியூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
உயிரிழந்தவரின் நண்பர் மருத்துவமனையில் அனுமதி
அப்போது மறவன் குட்டை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியதில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பவானிசாகரைச் சேர்ந்த கார்த்தி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். காரில் சிக்கிய அவரது நண்பரான மற்றொரு கார்த்தி மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.