ஈரோடு: திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதி சேர்ந்தவர் சதீஷ்குமார். மருத்துவரான இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். தன்னுடைய வேலைக்காக இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோம்புபள்ளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவரது மனைவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஊருக்கு சென்ற நிலையில், மருத்துவர் சதீஷ்குமார் வீட்டில் தனியாக இருந்து வந்ததாக தெரிகிறது. இவர் நேற்று வெகு நேரமாகியும் வீட்டிலிருந்து வெளியே வராததால் அக்கம் பக்கத்து வீட்டார் சந்தேகமடைந்து உள்ளனர். அதன் பிறகு இது குறித்து அக்கம் பக்கத்தினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து விரைந்து வந்த அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் மருத்துவர் சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதும், கையில் மருந்து செலுத்தியதற்கான ஊசி இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஈரோட்டில் இருந்து துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மருத்துவர் சதீஷ்குமாருக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதியினருக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் கூட சதீஷ்குமார் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆகையால் இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரசு மருத்துவர் இறந்ததற்கு குழந்தையின்மை தான் காரணமா? இல்லை வேறு எதுவும் பிரச்னையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்திரா முதல் ஜெயலலிதா வரை - ராகுலுக்கு முன்பே தகுதி நீக்கம் ஆன தலைவர்கள்...