ஈரோடு: புஞ்சை புளியம்பட்டி கால்நடைச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது. இந்தச் சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஆடு, கறவை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம்.
கோவை உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மாநிலத்திலிருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து கால்நடைகளை விலைபேசி வாங்கிச் செல்வர்.
இந்நிலையில், இன்று கூடிய வாரச்சந்தையில் வழக்கம்போல் ஆடுகள் விற்பனை நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.
150 வெள்ளாடுகள், 100 செம்மறி ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஐந்து முதல் 12 கிலோ வரையிலான வெள்ளாடுகள் ஆறாயிரத்து 500 ரூபாய் வரையும், ஐந்து முதல் 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள் ஐந்தாயிரத்து 500 ரூபாய் வரையும் விலை போயின.
மார்கழி மாதம் என்பதால் சந்தையில் இறைச்சி கடைக்காரர்கள், வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. இதனால், ஆடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றது. அதேசமயம் ஆடு வளர்ப்போர், விவசாயிகள் வெள்ளாடு, செம்மறி ஆட்டுக் குட்டிகளை வாங்கிச் சென்றனர்.
வழக்கமாகச் சந்தைக்கு 500 ஆடுகளுக்கு மேல் விற்பனைக்கு வரும். இன்று 250 ஆடுகள் மட்டுமே கொண்டுவரப்பட்டு 20 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. மார்கழி மாதம் முடியும் வரை ஆடுகள் விற்பனை மந்தகதியில்தான் நடக்கும். தை மாதம் பிறந்தால்தான் ஆடு வியாபாரம் சூடுபிடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கும்மியடிக்குது கரோனாவும் ஒமைக்ரானும்: இதுல சன்னி லியோனின் குத்தாட்டம் வேறயா?