கடந்த பிப்ரவரி மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அப்பகுதியில் காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நான்கு பேர் கஞ்சா விற்பனை செய்துவருவதை கண்டறிந்தனர்.
அவர்களை கைது செய்ய காவல் துறையினர் முயன்றபோது ராதா என்ற பெண் மட்டும் சிக்கினார். இதில் மூன்று பேர் தலைமறைவாகினர். ராதாவிடம் இருந்து காவல் துறையினர் ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிந்தனர்.
தப்பிச் சென்ற மூன்று பேரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்நிலையில் பனையம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே காவல் துறையினர் ரோந்து சென்றபோது அங்கு தலைமறைவான மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர்.
உடனே காவல் துறையினர் மூவரையும் மடக்கிப் பிடித்து புஞ்சை புளியம்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிந்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.