ஈரோடு, பெருந்துறையை அருகே பணிக்கம்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு வடமாநிலத்தவர்கள் பலர் வேலை பார்த்து வருகின்றனர். ஒடிசா மாநிலம், குண்டாபாய் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரா பெகாரா (30), அதே மாநிலத்தைச் சேர்ந்த நிரஞ்சன் பெஹாரா (19) ஆகியோரும் பனியன் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்தனர்.
ராஜேந்திர பெகாராவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், அந்த நால்வரும் நேற்று நள்ளிரவு ராஜேந்திர பெகாரா தங்கி இருக்கும் வீட்டுக்கு வந்தனர்.
பின்னர் அவர்களுக்கும், பெகாராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், திடீரென அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அரிவாள், கத்தியால் நாகேந்திர பெகாராவை சரமாரியாக வெட்டினர். இதில், அவருக்கு தலை கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து நால்வரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பெருந்துறை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, காவல்துறையினர் பெகாராவைச் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி பெகாரா உயிரிழந்தார். இதையடுத்து, பெருந்துறை துணை காவல் ஆய்வாளர் ராஜகுமார் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், பெகாராவின் உறவினர்கள் ரட்டிகண்டா பெகரா, பிரகார் பெகரா, பிரபுல்லா பெகரா, பிரதீப் நாயக் ஆகிய நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் கொரோனோ பரிசோதனை செய்ய மறுப்பு: முதலமைச்சருக்குப் பறந்த மின்னஞ்சல்