ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் வெள்ளைக்கரடு பகுதியில் வசிக்கும் விவசாயி நஞ்சப்பன். இவர், தான் வளர்த்து வரும் கால்நடைகளை பகல் முழுவதும் மேய்ச்சலில் ஈடுபடுத்திவிட்டு, இரவு தொழுவத்தில் கட்டி வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பின்னர், காலை தொழுவத்திற்கு திரும்பி வந்து பார்த்தபோது, தான் வளர்த்து வந்த மாட்டின் கன்றுக்குட்டி காணாமல் போனது தெரிய வந்துள்ளது. மேலும் மாட்டுத் தொழுவத்தில் மர்ம விலங்கின் கால் தடங்கலைக் கண்டு அதிர்ச்சியடைந்த நஞ்சப்பன், அது குறித்து டி.என்.பாளையம் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற டி.என்.பாளையம் வனத்துறை அதிகாரிகள், அங்கு பதிந்திருந்த கால் தடங்களை ஆய்வு மேற்கொண்டனர். அதில் கன்றுக்குட்டியை வேட்டையாடிச் சென்றது சிறுத்தை என்பதை உறுதி செய்தனர். அதன் பின்னர், சிறுத்தையைப் பிடிக்க வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் கூண்டு வைத்துள்ளனர்.
மேலும், இரண்டு தானியங்கி கண்காணிப்பு கேமாரகள் அமைத்து டி.என்.பாளையம் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் கொங்கர்பாளையம், வெள்ளைக்கரடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவூரில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடம் திறக்கப்படுமா? - எதிர்பார்ப்பில் மக்கள்!