ஈரோடு: சத்தியமங்கலம் அருகேயுள்ள கரளையத்தில் வாயில் காயத்துடன் திரிந்து வந்த குட்டி யானைக்கு, வனத்துறை சார்பில், கால்நடை மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து தெங்குமரஹடாவில் விடுவித்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து கரளையம் கிராமத்திற்குள், உடலில் காயத்துடன் 3 வயதுள்ள ஆண் யானை, அப்பகுதியில் உள்ள தங்கவேல் என்பவரது தென்னை தோப்பில் உலவி வந்துள்ளது. உடலில் காயத்துடன் திரிந்த யானையைப் பார்த்த கிராம மக்கள், இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், தோட்டத்தில் உள்ள யானைக்கு தீவனம் மற்றும் தண்ணீர் வைத்து, அதன் உடல் நிலை குறித்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், யானை நீர் மட்டும் அருந்திய நிலையில், உணவு உண்ண சிரமப்பட்டுள்ளது. இதனால், கால்நடை மருத்துவா் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினர், யானைக்கு துப்பாக்கி மூலமாக மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து யானைக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்ட நிலையில், உடல்நலம் சற்று சீரானது. இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் யானையை லாரியில் ஏற்றி தெங்குமரஹடாவில் விடுவித்தனர்.
இதையும் படிங்க: வடசென்னை முதல் தென் சென்னை வரை வடியாத வெள்ளம்… மீளாத தலைநகரம்…