சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனத்தையொட்டி தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்துவரும் இக்கிராமத்தையொட்டி மாயாறு ஓடுகிறது.
இந்த ஆற்றில் பாலம் ஏதும் இல்லாததால் பரிசல்களையே இந்த கிராம மக்கள் நம்பியுள்ளனர்.
இந்நிலையில், கூடலூரில் பெய்த கனமழை காரணமாக மாயாற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், இக்கிராமத்துக்கும் பவானிசாகருக்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் இக்கிராம மக்கள் பரிசல்களில் அபாயமான பயணங்களை மேற்கொண்டுவருகின்றனர்.
இதனையடுத்து, வெள்ளம் கரைபுரண்டு ஓடும் மாயாற்றில் பரிசல் மூலம் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.