தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இயக்கிவரும் அசைவ உணவகங்கள், இரவு நேர கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் உணவுகளைத் தயார் செய்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.
இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்கள் முன்பு எம்சிஏ பட்டதாரி ரோகிணி தேவி (34) பானிபூரி சாப்பிட்டதால் உயிரிழந்தாக ஈரோடு தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று (செப். 26) மாலை ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர்கள், காளைமாடு சிலை, டெலிபோன் பவன் ஆகிய பகுதிகளில் சாலையோரம் விற்பனை செய்யப்படும் பானிபூரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்குத் தரமான பொருள்களால், உணவு தயார் செய்யப்படுகிறதா, அன்றைய தினம் தயார் செய்த உணவுப் பொருள்கள்தான் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.
சோதனையில் பெரும்பாலான சாலையோர கடைகள், உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறாமல் கடைகளை நடத்திவருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விரைவில் உரிமங்களைப் பெற்று கடைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பழைய உணவுகளை பிரிட்ஜில் வைத்து அடுத்தநாள் பயன்படுத்தக் கூடாது, உணவுகளில் கலர் பொடிகள் சேர்க்கக் கூடாது என எச்சரிக்கை விடப்பட்டது.
இதையும் படிங்க: பானிபூரில சிறுநீரா? - அதிர்ச்சி வீடியோ