ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. இங்குள்ள மக்கள் நகர பகுதிக்கு செல்ல வேண்டுமானால், 25 கி.மீ தூர மண் சாலையில் தான் செல்ல வேண்டும். ஆனால் ஊரை ஒட்டி ஓடும் மாயாற்றை கடந்தால் எளிதாக செல்லலாம். இதனால் கிராம மக்கள் பரிசல் மூலம் மாயாற்றை கடந்து பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரியில் பெய்து வரும் கனமழையால், தெங்குமரஹாடா மலைப்பகுதியில் உள்ள பைக்காரா அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு வரும் உபரி நீர் மாயாற்றில் திறந்துவிடப்படுவதால் எந்த நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தெங்குமரஹாடா கிராம மக்கள் ஆற்றை கடக்க வேண்டாம். பரிசல் பயணத்தை தவிர்க்குமாறும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி சார்பில் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மாயாற்றில் வெள்ளம் வடிந்ததையடுத்து அங்கு இயல்புநிலை திரும்புவதால் தெங்குமரஹாடா மக்கள் வழக்கம்போல் பரிசலில் ஆற்றைக் கடந்து பவானிசாகர் சென்றனர். இந்நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரிசல் இயக்க இரண்டாவது முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.