கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலைப் புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் மஞ்சள் போர்டு இடத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் வந்தது.
இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் துணை இயக்குநர் கணேசன் அறிவுறுத்தலின்படி அப்பகுதியில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத் துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் சென்று மறைந்திருந்து கண்காணித்தனர்.
அப்போது, வெள்ளை நிற மாருதி காரில் இரு நபர்கள் வருவதையும் வனப்பகுதியிலிருந்து மூன்று பேர் தலைச்சுமையாகச் சந்தன மரத்துண்டுகளைச் சுமந்துவந்து காரில் ஏற்றிக் கடத்த முயற்சித்தனர். அப்போது அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டனர்.
வனத் துறை அலுவலர்கள் ஆனைமலை வனத் துறை அலுவலகத்தில் விசாரணை செய்ததில் இவர்கள் திருவண்ணாமலையை அடுத்த ஜமனாமரத்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ், முகமது பசீர், மணிகண்டன், சக்கரவர்த்தி எனத் தெரியவந்தது.
இவர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 73 கிலோ சந்தனக்கட்டைகள், மொபைல் போன், மாருதி 800 கார் உள்ளிட்ட பொருள்களை வனத் துறை பறிமுதல் செய்துள்ளது. மேலும், சந்தன மரம் வெட்ட மூளையாகச் செயல்பட்டவர் கேரள மாநிலம் மன்னார்காட்டைச் சேர்ந்த மூசாஹாஜி என்பவரின் மகன் அப்துல் சலீம்.
தலைமறைவாக உள்ள அப்துல் சலீமைப் பிடிக்க வனத் துறையினர் தனிப்படை அமைத்துத் தேடிவருகின்றனர். வெங்கடேஷ், அப்துல் சலீம் மீது ஏற்கனவே சந்தன மரம் கடத்தல் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் விஜய்க்கு எதிரான கருத்தை நீக்கிய நீதிபதிக்கு பிரிவு உபசார விழா