ஈரோடு அருகேயுள்ள திருப்பதி கார்டன் குடியிருப்புப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளும், தனி வீடுகளும் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் நிதிநிறுவன உரிமையாளரான இளங்கோ நேற்றிரவு அலுவலகப் பணியை முடித்துக்கொண்டு தனக்குச் சொந்தமான 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்குள் தூங்கச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கார் தீப்பற்றியெரிவதைக் கண்ட அருகாமை வீட்டினர் இளங்கோவை செல்ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் எரிந்து கொண்டிருப்பதைத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே வந்த இளங்கோ தனது கார் எரிந்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கு அருகாமை வீட்டினரும் உதவியதையடுத்து சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது என்றபோதிலும் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததுடன், வீட்டின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பொருட்களும் தீயில் எரிந்து நாசமடைந்தது.
இதுகுறிதது ஈரோடு தாலுகா காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் காரின் மீது பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை தெளித்து தீ பற்ற வைத்திருப்பது தெரிய வந்தது. இதனால் முன்விரோதம் காரணமாக கார் எரிக்கப்பட்டதா அல்லது வேறு காரணங்களால் கார் எரிக்கப்பட்டதா என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் ஸ்டீல் நிறுவனம் எஸ்பிஐ வங்கியில் மோசடி? சிபிஐ அதிரடி சோதனை