ஈரோடு: ஈரோடு பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சத்தியமங்கலம் சாலையில் கட்டுமான பொருட்கள், உணவகங்கள், மின்சாதன பொருட்கள், மரக்கடைகள் என 20க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் நேற்றிரவு (டிச.25) சுமார் 11.30 மணியளவில் பெயிண்ட், டையில்ஸ் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்து புகை வருவதை கண்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென பற்றி அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது. நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த 25க்கும் மேற்பட்ட வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் கட்டுமானப் பொருள்கள் விற்பனை கடை உள்பட நான்கு கடைகளிலிருந்த டைல்ஸ், பெயிண்ட், மரக் கதவுகள், ஜன்னல்கள், மின் இணைப்புக்கு பயன்படும் பொருட்கள், குளியலறை, கழிப்பறை வடிவமைப்பு பொருட்கள், பிளாஸ்டிக் குழாய்கள் என ரூ.2.50 கோடி மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த இரண்டு நாட்களின் வானிலை நிலவரம் என்ன?