ஈரோடு அருகேயுள்ள வெண்டிபாளையத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்கில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும். குப்பைக் கிடங்கை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட வீதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்ப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இங்கு கொட்டப்படும் குப்பைகளால் நல்ல குடிநீர், நல்ல உணவைக் கூட உட்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் குப்பைக் கிடங்கை மக்களுக்கு எவ்வித பாதிப்புமில்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 23) நள்ளிரவில் குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து மொடக்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின்பேரில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க முற்பட்டனர்.
ஆனால், பலத்த காற்று வீசியதால் தீயும் பரவி புகையும் அதிகம் வெளிப்பட்டது. இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக தீயை அணைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனிடையே நேற்று (ஆகஸ்ட் 24) காலை தீயை அணைத்துவிட்டதாகக் கூறி தீயணைப்புத்துறையினர் சென்று விட்ட நிலையில், நேற்று மாலை முதல் மீண்டும் குப்பையில் தீப்பற்றி எரிந்துள்ளது.
தீயிலிருந்து வெளியேறும் புகை மூட்டத்தினால் அப்பகுதியிலுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கடும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி இங்குள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைகிறார் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை!