ஈரோடு கொல்லம்பாளைம் சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் பணியாற்றி வந்தவர் தேன்மொழி. இவர் கடந்த வாரம் காய்ச்சல் காரணமாக பணிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளார். பின்னர், மார்ச் 23ஆம் தேதி மீண்டும் பணிக்கு திரும்பிய அப்பெண் உடல்சோர்வின் காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
இதனால் மீண்டும் அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டது. அவரது சொந்த ஊரான சீனாபுரத்திலிருந்து தனது தாய் வீடான கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் தங்கி ஓய்வெடுத்துவந்தார். இந்நிலையில், இன்று காலை காய்ச்சல் காரணமாக தேன்மொழி உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்பு தகவலறிந்த சுகாதாரத் துறையினர் காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு என்பதால் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அப்பெண் பணியாற்றியுள்ள பகுதியில் அதிகளவு கரோனா பரவியுள்ளதால் கரோனா பாதிப்பில் தேன்மொழி உயிரிழக்க வாய்ப்புள்ளதாக எண்ணி அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் தேன்மொழி காய்ச்சல் பாதிப்பில் இருந்தும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெறாமல் இருந்துள்ளார். மருத்துவமனைக்குச் சென்றால் தன்னை தனிமைப்படுதிவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்த தேன்மொழி, தற்போது உயிரிழந்தார். தேன்மொழி தங்கியிருந்த அவரது தாய் வீட்டின் வீதியில் உள்ள பொதுமக்களையும் சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்தனர். அவரது தாய் வீடும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிகப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரியலூரில் பெண் ஒருவருக்கு கரோனா உறுதி!