ஈரோடு: தமிழ்நாடு அரசு புதிதாக வெளியிட்டுள்ள மின்வேலி அமைப்பதற்கான புதிய அரசாணையை கண்டித்தும், அதனை திரும்பப் பெறக்கோரி தாளவாடியில் விவசாயிகள் இன்று (செப்.2) கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தமிழக வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் யானைகள் புகுந்து விளை பயிர்களில் சேதப்படுத்துகிறது. புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் கால்நடைகளை வேட்டையாடுவதால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வனத்தில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை, புலி, காட்டுப்பன்றி, மான் போன்ற விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் மின்வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
தற்போது மின்வேலியில் உயர்அழுத்த மின்சாரம் பாய்ச்சுவதால் யானைகள் அடிக்கடி உயிரிழக்கும் சம்பவம் நிகழ்கிறது. இதனை தடுக்க தமிழ்நாடு அரசு, மின்வேலிக்கான புதிய அரசாணையை அமல்படுத்தியது. இதன்படி வனத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள விவசாயிகள் மின்வேலி அமைக்க வனத்துறையிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகள்.. தமிழக அரசு துணை போவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கண்டனம்!
அதாவது அரசாணையின் படி சோலார் மின் உற்பத்தி மூலம் மட்டுமே விவசாய மின்வேலிகளுக்கான மின்சாரம் பெற வேண்டும் எனவும், மின்வேலியில் மின்விநியோகம் 12 வோல்ட்க்கு அதிகமாக இருக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிகள் அறிவித்துள்ளது. இந்த புதிய அரசாணையை கண்டித்து தாளவாடியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'திரும்ப பெறு, திரும்ப பெறு' என விவசாயிகள் புதிய அரசாணையை திரும்ப பெறுமாறு கோஷமிட்டனர். இயற்கை பேரிடர், கூடுதல் உற்பத்தி செலவு போன்ற காரணங்களால் வருவாய் இழந்த விவசாயிகளுக்கு இந்த புதிய அரசாணையால் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். எனவே, இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். என விவசாயிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசை கண்டித்து இப்போராட்டத்தில் சுமார் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்.. திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்!