ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
தாளவாடி மலைப்பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் மலைக் கிராமங்களில் புகுந்து வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் இன்று (ஜூன் 15) தாளவாடி அருகே உள்ள சேரன் நகர்ப் பகுதியில் விவசாயி நடராஜ் என்பவரது தோட்டத்தில் நுழைந்த ஐந்திற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தின.
விவசாயிகள் கோரிக்கை
மேலும், விவசாய தோட்டத்தில் இருந்த இரண்டு மாமரங்களின் கிளைகளை முறித்து சேதப்படுத்தின. யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தும் சத்தம் கேட்ட விவசாயி நடராஜ், அக்கம்பக்கத்து விவசாயிகள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை விரட்டினார்.
இருப்பினும் காட்டு யானைகள் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. காட்டு யானைகள் சேதப்படுத்திய வாழை மரங்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.