ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மல்லி, முல்லை, சம்பங்கி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்டப்பல்வேறு வகையான மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் விவசாயிகளால் நடத்தப்படும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்படும்.
அவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்த சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையும் கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக விசேஷ நாள்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் நேற்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று இரு மடங்கு விலை உயர்ந்து ஒரு கிலோ மல்லிகைப்பூ 800 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் முல்லைப்பூ ஒரு கிலோ 350 ரூபாய்க்கும், சம்பங்கி பூ ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை பூ ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், செண்டுமல்லி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையானது.
மல்லிகைப்பூக்கள் இரு மடங்கு விலை உயர்ந்ததாலும், மற்ற பூக்களுக்கும் நல்ல விலை கிடைத்ததால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: கோயில் விழாவில் அதிக சக்தி வாய்ந்த எல்இடி விளக்குகள்... 100க்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல்