ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் உள்ள முதியனூர் அருகில், சாலையோரம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்துகிடப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக ஆசனூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற ஆசனூர் காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தபோது இறந்துகிடந்த நபரின் கண், காதுக்குப் பின்புறம் ரத்தக்காயங்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்த சித்தப்பா (40) என்பதும், இவர் நெய்தாளபுரம் பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் டிராக்டர் ஓட்டுநராகப் பணிபுரிந்ததும் தெரியவந்தது.
சித்தப்பாவிற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால், வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்படுவதோடு கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு தனது மனைவி ராஜியுடன் தகராறு செய்து வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ராஜி ஆசனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உடலில் காயங்கள் உள்ளதால் யாராவது அடித்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
மேலும், ஈரோட்டிலிருந்து தடயவியல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரித்தனர். அப்போது அங்கு கிடைத்த தடயத்தை வைத்து டிராக்டர் உரிமையாளர் முத்து முருகேஷிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தில் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
அவரது வாக்குமூலத்தில், சித்தப்பா தனது தோட்டத்தில் டிராக்டர் ஓட்டிவந்ததாகவும், சம்பவ தினமான 27ஆம் தேதி சம்பள பாக்கியைக் கேட்டு தனது பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்ததால் ஆத்திரமடைந்து கீழே தள்ளியதில் அங்கிருந்த கூர்மையான கல் மீது விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
பின்னர் அவரது உடலை டிராக்டரில் வைத்து தலமலை சாலையில் விபத்து நடந்ததுபோல வீசியெறிந்ததாகவும் அவர் கூறினார். கைதான முத்து முருகேஷை தாளவாடி காவல் துறையினர் ஈரோடு நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர்.