ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு தமிழ்நாடு,கர்நாடகா,கேரளா மஹாராஷ்டிரா, ஆந்திரா,தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள்,மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வதும் தங்களுக்கு தேவையான மாடுகளை வாங்கி செல்வதும் வழக்கம்.
மார்ச் மாதம் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் 50ஆயிரம் ருபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கால்நடை சந்தைக்கு வரும் விவசாயிகள் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக குறைந்திருந்தது.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது விலகியதையடுத்து இந்த வாரம் நடைபெற்ற கால்நடை சந்தையில் மாடுகளை விற்பனை செய்ய விவசாயிகள், வியாபாரிகள் அதிக அளவில் வந்தனர்.
பசு மாடு 16 ஆயிரம் ரூபாய் முதல் 34 ஆயிரம் ரூபாய் வரையும், எருமை மாடு 18 ஆயிரம் ரூபாய் முதல் 36 ஆயிரம் ரூபாய் வரையும் கன்றுக்குட்டி 2 ஆயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ருபாய் வரை என 2 கோடி ரூபாய் விற்பனை நடைபெற்றது.