ஈரோடு: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் போலி மதுபானங்களை ஏற்றி வந்த வாகனத்தை கும்பகோணம் காவல் துறையினர் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஈரோடு சூளை பகுதியில் இருந்து போலி மதுபானங்களை வாங்கி வந்ததாக தெரிவித்ததன் அடிப்படையில், கும்பகோணம் போலீசார் மற்றும் ஈரோடு மதுவிலக்கு போலீசார் இன்று(செப்-9) சூளையில் இயங்கி வந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்தனர்.
போலி மதுபான ஆலையில் போலி மதுபானங்கள் தயாரிப்பதற்குத்தேவையான எரிசாராயம், பல்வேறு கலர் பொடிகள், மூடிகள், போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒரு ஆட்டோ ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் போலி மதுபானங்களைத் தயாரித்துக்கொண்டிருந்த நான்கு பேரை பிடித்த காவல்துறை அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு போலி மதுபானங்களை கடந்த சில மாதங்களாக அனுப்பி வந்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக ராமநாதபுரம் மாவட்டத்தைச்சேர்ந்த வீரபாண்டியன், மணிராஜ், அசோக்குமார், சித்திரைவேல், ஆகிய 4 பேர் கைது செய்தனர்.
இதுகுறித்து மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் பவித்ராசேகர் கூறும்போது, ‘போலி மதுபான ஆலை இயக்கியவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்; கடந்த நான்கு மாதங்களாக இந்த ஆலையை இயக்கி போலி மதுபானங்களை உற்பத்தி செய்யப்பட்டு வந்ததும் தெரியவந்தது. தயாரிக்கப்பட்ட போலி மதுபானங்களை கும்பகோணத்திற்கும் அனுப்பப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னை சாலைகளில் தொடரும் பைக் சாகச அட்டூழியம்; பீதியில் பொதுமக்கள்