ஈரோடு: தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து எம்எல்ஏவாக அவர் இருந்து வந்த நிலையில், திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு ஜனவரியில் உயிரிழந்தார்.
இந்நிலையில், ஈரோடு பெரியார் மன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலாமாண்டு புகழஞ்சலி கூட்டம் இன்று (ஜன.4) நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அவரது குடும்பத்தினர், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஆர் ஈஸ்வரன் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கூட்டத்தில் பங்கேற்று, திருமகன் ஈவெரா படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா பணிகள் உள்ளிட்ட அவரின் செயல்பாடுகளை கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பார்கள் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இறுதியாக பேசிய அமைச்சர் முத்துசாமி, திருமகன் ஈவெரா குறித்து பல நினைவுகளை நினைவு கூர்ந்து, அமைச்சர் முத்துசாமி பேச முடியாமல் கண்ணீருடன் நன்றி வணக்கம் என்று கூறி மீண்டும் அவரது இருக்கைக்குச் சென்று அமர்ந்தார்.
இந்த செயல் கூட்டத்தில் பங்குபெற்ற கட்சி நிர்வாகிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி கூட்டத்தில் எதுவும் பேசாமல், சோகத்துடனே அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? - அமைச்சர் முத்துசாமி தகவல்!