கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமான பொது இடங்களில் கூட்டங்களை தவிர்க்கவேண்டும் என்றும், மற்றவர்களுக்கு கை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து பயணத்திற்கு வெளியேற்றப்படும் அனைத்து பேருந்துகளிலும், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து துடைத்த பிறகே வழித்தடத்திற்கு அனுப்பப்படுகிறது.
கோபிசெட்டிபாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து மதுரை, தேனி, திருச்செந்தூர், கும்பகோணம், சென்னை, சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி போன்ற வெளி மாநிலங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது.
வெளி மாவட்டம், மாநில பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், கரோனா தொற்று ஏற்படாது பாதுகாக்கவும் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டுவருகின்றன.
இந்தப் பூச்சிக்கொல்லி மருந்தை அரசு பேருந்துகளில் செல்லும் பயணிகள் கை வைக்கும் கைபிடிகள், படியில் ஏறும் பகுதிகளில் உள்ள கம்பிகள், இருக்கைக்கம்பிகள் ஜன்னல் ஓர கம்பிகள் என அனைத்துப் பகுதிகளிலும் தெளித்து சுத்தமான துடைத்த பிறகே வழித்தடத்திற்கு பேருந்துகள் அனுப்பபட்டுவருகின்றன.
இதனால் பேருந்துகளை சுத்தம் செய்வதற்கு நான்கு பணியாட்களை போக்குவரத்து கழக கிளை மேலாளர் நியமித்து கண்காணித்து வருகிறார். இந்நிலையில் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்காமல் ஒரு பேருந்து கூட வெளியில் செல்லக்கூடாது என்றும், பணிமனை ஊழியர்களுக்கு அவர் உத்தரவு வழங்கியுள்ளார்.
இதனால் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கரோனா வைரஸ் குறித்து அச்சப்படத்தேவையில்லை என்றும் பயணிகளும் கரோனா குறித்து விழிப்புணர்வு அடைந்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும், அரசு போக்குவரத்து பணிமனை அலுவலர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாதீர்கள்' - கொரோனா குறித்து கரீனா கபூர் ட்வீட்