ஈரோடு மாவட்ட விவசாயிகள் பரவலாக மஞ்சள் பயிரிட்டு வந்தனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் நேரடியாக ஈரோடு வந்து தங்களுக்குத் தேவையான மஞ்சளைக் கொள்முதல் செய்தனர்.
இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு 17 ஆயிரத்து 500 ரூபாய் விலை கிடைத்ததால், மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மஞ்சள் பயிரை வழக்கத்தை விட அதிகளவில் பயிரிட்டனர். இதனிடையே ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் விதை மஞ்சளைப் பெற்று தங்களது மாநிலங்களிலும் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டனர்.
அங்கு பயிரிடப்பட்ட மஞ்சள் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு மாவட்ட மஞ்சளுக்குரிய விலை கிடைக்காமல் போனது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சளைப் பயிரிட்ட விவசாயிகள் சாகுபடிக்காக பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும், மஞ்சள் விளைச்சலை எடுக்க முடியாமலும் தற்கொலையில் ஈடுபட்டனர்.
கடந்தாண்டு இறுதி முதல் தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்ததையடுத்து ஈரோடு மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடின்றி மாவட்டம் முழுவதும் பரவலாக மஞ்சள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் மஞ்சளுக்குரிய விலை கிடைக்காமல் குவிண்டாலுக்கு மிகக் குறைவான விலையே கிடைத்து வருவதால் விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்க ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனைக் கூடத்தை அமைக்க வேண்டும் எனவும், மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டால் நல்ல விலை கிடைக்க வாய்ப்பிருப்பதால் அதற்கான அனுமதியை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் எனவும் மஞ்சள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வீடு வீடாகச் சென்று 'இருளர்' சான்று வழங்கிய மாவட்ட ஆட்சியர்!