ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் பெரியார் நகரைச் சேர்ந்த ரங்கன் மனைவி பாப்பாத்தி. இவர் நேற்று மாலை வீட்டில் சமையல் செய்துவிட்டு பக்கத்து வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
அப்போது அவர் வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் அடுப்பை அணைக்காமல் சென்றிருந்ததால் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது. மெள்ள மெள்ள அந்தத் தீ அருகிலிருந்த துணியில் பற்றிக்கொண்டது. அதனைத் தொடர்ந்து வீடு முழுவதும் தீ பரவியது.
இது குறித்து அறிந்த பாப்பாத்தி, வீட்டில் பற்றிக்கொண்ட தீயை அணைக்க முற்பட்டுள்ளார். நிலைமை கைமீறிப் போகவே சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில் அங்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இந்தத் தீ விபத்தால் வீட்டிலிருந்த துணி, பொருள்கள் என அனைத்தும் தீயில் கருகி நாசமடைந்தன. நல்வாய்ப்பாக விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும் படிக்க : ஆசிட் வீசிய மாணவன் உட்பட 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது! கடலூரில் அதிரடி!