இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்ற காரணத்திற்காக டிக்டாக், ஷேர்இட் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடைவிதித்தது. டிக்டாக் தடையால் அதனைப் பயன்படுத்தி வந்தவர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். டிக்டாக் தடைக்குப் பிறகாக அதேபோல் இருக்கும் செயலியை (App) உருவாக்கும் முயற்சியில் பல இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் வெளியான இந்தியாவைச் சேர்ந்த ‘சிங்காரி’ என்ற செயலியும் இளைஞர்களிடையே அதிகளவு வரவேற்பைப் பெற்றது. இந்தச் செயலி வெளியான ஒரு மாதத்திற்குள்ளாகவே சுமார் ஒருகோடி பேர் இதனை டவுன்லோட் செய்துள்ளனர்.
இந்நிலையில், டிக்டாக் செயலிக்கு மாற்றாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயமின்றி பயன்படுத்திடும் வகையில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஃபன் ஃபன் (FUN FUN) என்ற புதிய ஆப்பை ஈரோட்டைச் சேர்ந்த மென்பொறியாளர் உருவாக்கி அசத்தியுள்ளார்.
மென்பொறியாளரான குமரவேல், கணினி தொடர்பான அனைத்து வகை பணிகளையும் மேற்கொண்டுவருகிறார். குறிப்பாக, தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் விற்பனை ரசீதுகள் உள்ளிட்ட கணினி மென்பொருள் தயாரிப்பு பணிகளிலும், பள்ளி, கல்லூரிகளுக்குத் தேவைப்படும் சாப்ட்வேர்களையும் தயாரித்து வழங்கும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார். டிக்டாக் செயலிக்கு மாற்றாக, அதைவிட அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஆப்பை உருவாக்க வேண்டுமென்று இவர் முடிவுசெய்தார். அதன்படி, தன் அலுவலகத்தில் பணியாற்றும் 40 பணியாளர்களின் உதவியுடன் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு புதிய ஆப் தயாரிக்கும் பணியைத் தொடர்ந்துள்ளார்.
இதனிடையே, சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட அனைத்து வகை ஆப்களுக்கும் தடை விதிக்கப்பட்டதால், இந்தியத் தயாரிப்பை உடனடியாக வெளியிட்டு விட வேண்டும் என்கிற உத்வேகத்துடன் தனது ஆப் தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தினார். இதற்காக இவர் இதுவரை 22 லட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்திய மக்கள் இந்திய தயாரிப்பு கணினி தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும் என்கிற ஆசையின் காரணமாகவே, இந்தத் தயாரிப்பில் ஈடுபட்டோம். இதுபோலவே வருங்காலத்தில் கூகுள் போன்றொரு புதிய ஆப்பை உருவாக்கிடவும் ஆசை உள்ளது. இந்த ஆப்பை எவ்வித பயமுமின்றி பாதுகாப்புடன் உபயோகிக்கலாம். தனிநபர் டேட்டாக்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் டேட்டாக்களிலோ, அவர்களது ப்ரோபைலிலோ அவர்களது அனுமதியின்றி நுழைய முடியாத வகையில் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இந்த ஆப்பை முதற்கட்டமாக ஆயிரம் நபர்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்துவருகிறோம். அவர்கள் தெரிவிக்கும் குறைபாடுகளைக் களைந்த பிறகு, ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆப் வெளியிடப்படும். புது ஆப் வெற்றி பெற்ற பிறகு விளம்பரத்தையும், பரிசுப் போட்டிகளையும் அறிவிக்கவுள்ளோம். எங்களது இந்த முயற்சிக்கு அனைவரும் ஆதரவு அளிக்கவேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:குற்றம் 04: டிக்டாக் ரசிகர்களே உஷார்... கைபேசி பயனர்களைக் குறிவைக்கும் 'டிக்டாக்' போலி செயலிகள்!