ஈரோடு: கோபிச்செட்டிபாளையம் அருகே கவுண்டன் புதூரைச் சேர்ந்த தம்பதி கணேசன்-மனோன்மணி. இவர்களுக்கு சஞ்சய் என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது.
கூலித்தொழிலாளியான கணேசன் இரு சக்கர வாகனத்தில் மனைவி மனோன்மணி மற்றும் குழந்தையுடன் கோபிச்செட்டிபாளையதிலிருந்து இன்று (ஜூலை 27) அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வேன் மோதி விபத்து
தனியார் மில் கம்பெனி வேன் ஒன்று பணியாளர்களை ஏற்றிக் கொண்டு அவ்வழியே சென்று கொண்டிருந்தது. குள்ளம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வேன் வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த மனோன்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணேசன் மற்றும் குழந்தை சஞ்சய் காயமடைந்தனர்.
ஓட்டுநர் தப்பி ஓட்டம்
விபத்து குறித்து அறிந்து அப்பகுதியில் திரண்ட கிராம மக்கள், வேன் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இந்த விபத்தில் வேனிலிருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
வழக்குப்பதிவு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்த மனோன்மணியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக சக்தி சாலையில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு