ஈரோடு: கோபிசெட்டிபாளையம் துறையம்பாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார். கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்குச்செல்வது இவரது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், கரும்பு வெட்டும் வேலைக்குச்சென்ற மூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து, மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் பல இடங்களில் தந்தை மூர்த்தியைத் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், தேடுவதைத் தொடர்ந்தனர். இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையப்பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக மூர்த்தியின் உறவினர்கள், அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து மூர்த்தியின் மகன் கார்த்திக் சத்தியமங்கலம் சென்று பார்த்த போது, முகம் அழுகிய நிலையில் இருந்தாலும் அவரது தந்தையைப் போன்ற தோற்றத்துடன் இருந்ததால், இறந்து கிடந்தது தனது தந்தை தான் என தன் மகன்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து, உடனே சடலத்தை எடுத்துக்கொண்டு துறையம்பாளையம் கொண்டு சென்று உரிய முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்தார்.

இந்நிலையில் இறந்து போனதாகக்கூறி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியிலிருந்து கரும்பு வெட்டும் பணியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு துறையம்பாளையத்தில் உள்ள தனது வீடு திரும்பி உள்ளார். அப்போது, அவரைப் பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பங்களாப்புதூர் காவல்துறையினர் உடனடியாக மூர்த்தி வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அடக்கம் செய்யப்பட்ட அந்த நபர் யார்? என்ற கேள்வி எழுந்த நிலையில் அடையாளம் தெரியாத அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இந்த நிலையில் துறையம்பாளையம் பகுதியில் மூர்த்தி என நினைத்து நல்லடக்கம் செய்யப்பட்ட பகுதியில் கோபிசெட்டிபாளையம் தாசில்தார் தியாகராஜன் முன்னிலையில் சத்தியமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர், பங்களாபுதூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் பெருந்துறையிலிருந்து, வரவழைக்கப்பட்ட மருத்துவக்குழு உதவியுடன் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
மேலும் பிரேதப்பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்த விவரம் தெரியும் என சத்தியமங்கலம் மற்றும் பங்களாபுதூர் காவல்நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓட்டிப் பார்ப்பதாக கூறி புல்லட் திருட்டு: காதல் ஜோடி கைது