ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோட்டில், அருண் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருபவர் செந்தில்குமார். இவர் மனைவி தேவி, மகள் நிவேதாவுடன் வசித்து வருகிறார். இவர் கோபிசெட்டிபாளையத்திருந்து தனது மகள் நிவேதாவை அழைத்துக் கொண்டு கொளப்பளுர் அருகே உள்ள பொன்னைமரத்து அய்யன் கோயிலுக்கு சென்றார்.
அங்கு இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மகள் நிவேதாவுக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவகத்தில் சரியான வருமானம் இல்லாத காரணத்தால், கந்து வட்டிக்கு கடன் வாங்கி செந்தில்குமார் உணவகத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கந்து வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் உணவகத்திற்கு வந்து பணத்தை திரும்பி அளிக்கும் படி, தகாத வார்த்தைகளால் திட்டியதால்தான் செந்தில்குமார், அவரது மகள் நிவேதா ஆகியோர் தற்கொலைக்கு முயன்றதாக, அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் கணவர் செந்தில்குமாரின் உடலைப்பார்த்து, அவரது மனைவி தேவி கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
இதையும் படிங்க: தாயும், மகளும் ஒன்றாக தூக்கிட்டுத் தற்கொலை