தமிழ்நாட்டில் கனோரா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகிய இடங்களுக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற கோயில்களுக்குள் சளி, இருமல் அறிகுறியுடன் பக்தர்கள் யாரும் வரக்கூடாது எனவும் கோயில் நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
முக்கியக் கோயில் விழாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் இவ்விழாவில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலிருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் கலந்துகொள்வார்கள். ஒரே இடத்தில் அதிக மக்கள் கூடுவதால் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயிலில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கோயில் திருப்பணி கமிட்டி, கோயில் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெறவிருந்த பண்ணாரி அம்மன் குண்டம் பூச்சாட்டு விழா குறித்தும், ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறவிருந்த குண்டம் விழா குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பக்தர்களின் நலன் கருதி கரோனா பரவாமல் தடுக்க குண்டம் திருவிழாவை தற்காலிகமாக ஒத்திவைக்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மக்கள் சாமி கும்பிடுவதை வீட்டிலேயே கும்பிடலாம் என்று கூறிய அவர், குண்டம் விழா மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
கரோனா பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் இல்லையென்றும், முகக்கவசம் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இரண்டாம் நபருக்கு கரோனா தொற்று!