ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி புதூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (74). கூலித் தொழிலாளியான இவர், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி மாலை கவுந்தப்பாடி பகுதியில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை மிட்டாய் வாங்கி கொடுப்பதாகக் கூறி சைக்கிளில் அவரது வீட்டிற்குக் கடத்திச் சென்றுள்ளார்.
இதற்கிடையில், வீட்டிற்கு முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என அவரது பாட்டி வெளியே வந்து விசாரித்தபோது, பழனிச்சாமி சிறுமியை சைக்கிளில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக, அவர் பழனிச்சாமி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, பழனிச்சாமி சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. இதைப்பார்த்த சிறுமியின் பாட்டி கூச்சலிட பழனிச்சாமி அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கோபியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய காவல் துறை துறையினர் கடத்தல், போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர்.
இந்த வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் குழந்தையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ரூ. 4 ஆயிரம் அபராதம் கட்டவேண்டும் என்றும் கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து முதியவர் பழனிச்சாமியை காவல் துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க : ரத்தானது பொதுத் தேர்வு - குதூகலத்தில் மாணவர்கள்..!