ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வைரமங்கலம் பாப்பமடைக்காடு பகுதியில் கந்தசாமி என்பவரின் தோட்ட கிணற்றில் ஒரு பெண், சிறுமி ஆகியோர் சடலமாக மிதந்துள்ளனர்.
அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கிணற்றில் மிதந்த சடலங்களை மீட்டு எடுத்தனர். அதன்பின் சடலங்களை உடற்கூறாய்விற்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதன்பின் மேற்கொண்ட விசாரணையில், இறந்த அந்த பெண் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்றும், சிறுமி ஜெகதாம்பாள் அவரது மகள் என்றும் தெரியவந்துள்ளது.
பூங்கொடியின் கணவர் ராமலிங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு பூங்கொடி விவசாய கூலி வேலைக்கு சென்று தனது மகள் ஜெகதாம்பாளை படிக்க வைத்துவந்துள்ளார்.
மேலும் இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார்களா என்பதை கண்டறிய காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.