ஈரோடு: ஈரோடு அடுத்துள்ள மூலக்கரை கிராமத்தில் பிரபல தனியார் ஆயில் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆயில்கள், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆலையில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேறும் கழிவுகளால், அப்பகுதியைச் சுற்றியுள்ள கூறப்பாளையம், கதிரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீர், கிணறு, ஆழ்துளைக்கிணறு போன்றவைகளும் மாசடைந்து வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையின் காரணமாக காற்று மாசடைந்து வருவதாக கூறும் கிராம மக்கள், பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த தனியார் ஆலைக்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட தனியார் ஆலையில் உரிய ஆய்வு மேற்கொண்டு, சுத்திகரிக்கப்படாமல் கழிவுகள் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்தி, சுத்தமான காற்று மற்றும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும், இது குறித்து மூலக்கரையைச் சேர்ந்த செளமியா என்பவர் கூறும்போது, “எங்கள் பகுதியில் உள்ள ஆயில் கம்பெனியில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் மனிதர்கள் உள்பட ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அதிலும், 4 பேர் இதுவரை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர். மேலும், பலருக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரித்து வெளியேற்றுவதை உறுதி செய்யவும், இதனால் சுற்று வட்டார கிராம மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும் என கோரி இதுவரை பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். சில நேரம் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.
அவ்வாறு செய்த ஒரு மாத காலம் முறையாக கழிவுகள் வெளியேற்றப்படும். பின்னர், பழைய நிலைக்கு திரும்பிவிடும். எனவே, உரிய விசாரணை நடத்தி, சுற்று வட்டார கிராமத்தினரின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்” என தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த டிசம்பர் 21 அன்று, இந்த தனியார் ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆலைக்கு எந்த வித அனுமதியும் அளிக்கக் கூடாது என கோரியும், ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு வந்த மூலக்கரை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகனை முற்றுகையிட்டும், அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு, பின்னர் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விபரீதமாக மாறியதா வெள்ளநீர் கால்வாய்? - தத்தளித்த கிராமம்! சபாநாயகரின் விளக்கம்