ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தூக்கநாயக்கன்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த நான்கு நாட்களாக சிறுத்தை ஒன்று மணி, ரவீந்தரன் ஆகியோரின் விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடுகளை கடித்து கொன்றுள்ளது. இதையடுத்து பெரியகொடிவேரி பகுதியில் உள்ள பீட்டர் என்பவரின் விவசாய தோட்டத்தில் சிறுத்தை புகுந்து பசுங்கன்றை அடித்து கொன்று சுமார் 200மீட்டர் தொலைவிற்கு இழுத்து சென்று விட்டுவிட்டு சென்றுள்ளது.
இதனால் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தெனைத் தொடர்ந்து சிறுத்தையைப் பிடிக்க தூக்கநாயக்கன்பாளையம் வனசரக வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை ஆய்வு செய்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கேமராக்கள், கூண்டுகள் அமைத்துள்ளனர்.
வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைத்துள்ள பகுதிகளை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சென்று பார்வையிட்டு வனத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கால்நடைகளை தாக்கும் சிறுத்தையை விரைவில் பிடித்து பாதுகாப்பான வனப்பகுதியில் விடுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: போலி வீடியோக்களை நம்ப வேண்டாம்: வனத்துறை வேண்டுகோள்