ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் வன சரகத்துக்குட்பட்ட அடிமலை மாதேஸ்வரன் கோயில் உள்ளது. இதன் அருகில் விவசாயி ரவி என்பவர் தனது விவசாய தோட்டத்தில் சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாததால் மாடு, ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்திவருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு (மே 27) இவரது வெள்ளாட்டு மந்தையில் புகுந்த சிறுத்தை 14 வெள்ளாடுகளில் 12 வெள்ளாடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் 12 ஆடுகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
இரு வெள்ளாடுகளை கடித்து வனப்பகுதி அருகில் இழுத்துச்சென்று சாப்பிட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ஆகும். காலையில் வெள்ளாட்டு மந்தைப்பகுதிக்கு வந்து பார்த்த விவசாயி ரவி அதிர்ச்சியடைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து டி.என்.பாளையம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறை அலுவலர்கள் உயிரிழந்துள்ள வெள்ளாடுகளையும், கடிபட்ட இடங்கள், வனவிலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். .
தற்போது உயிரிழந்துள்ள வெள்ளாடுகளுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்றும், சிறுத்தையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் விவசாயி ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஆடுகள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு ரவியின் தோட்டப்பகுதியிலேயே புதைக்கப்பட்டன. வெள்ளாடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றுள்ள சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.