ஈரோடு: கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை ஏற்கனவே தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து 2 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், காவிரி ஆற்றில் இரு கரங்களையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி ஆற்றங்கரைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (ஆக.4) அதிகாலை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் கருங்கல்பாளையம் காவிரி கரை பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. அதேபோல், முனியப்பன் கோவில் செல்லும் சாலையில் வெள்ளம் சூழ்ந்து அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 100 வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் சிரமம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட வருவாய் துறையினர், போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டு அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கருங்கல்பாளையம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு!