ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே தட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'தமிழ் அஞ்சல்' பத்திரிகையின் பெருந்துறை வட்ட செய்தியாளர் எனக்கூறி கொண்டு அரசு அதிகாரிகள், பஞ்சாயத்துத் தலைவர், செயலர், பார் உரிமையாளர்களை மிரட்டிப் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய ஊழியர் பூங்கொடியிடம் செய்தி வெளியிட்டு விடுவேன் எனக் கூறி, பணம் பறித்தது மட்டுமின்றி செய்தி வெளியிடாமல் இருக்க, மாதந்தோறும் பணம் தர வேண்டும் என்றும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் பூங்கொடி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.
இவர் சென்னிமலை, பெருந்துறை பகுதிகளில் அரசு அதிகாரிகள், பஞ்சாயத்துத் தலைவர்களிடம் தான் செய்தியாளர் எனக்கூறி மிரட்டுவதும், பார் உரிமையாளர்களிடம் தினசரி 300 ரூபாய் மாமூல் தர வேண்டும் என எச்சரிக்கை விடுப்பதுமான ஆடியோவையும் காவல் துறையினர் வெள்ளியங்கிரி செல்போனிலிருந்து கைப்பற்றினர்.
இதுமட்டுமின்றி சென்னையைச் சேர்ந்த இளம் பெண் குளிப்பதை மறைந்திருந்து செல்போனில் படம் பிடித்து, அந்தப் பெண்ணை பகிரங்கமாக மிரட்டுவதும், அதற்கு இளம் பெண் தற்கொலை செய்வதாக கதறுவதுமான ஆடியோவும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது, காவல் துறையினர் முதல் கட்டமாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலி பத்திரிகையாளரை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, வெள்ளியங்கிரி என்ற செய்தியாளரை ஏற்கெனவே பணி நீக்கம் செய்து விட்டதாக, தமிழ் அஞ்சல் என்ற அந்த பத்திரிகை நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதையும் படிங்க: ரோஹிங்யா அகதிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து 16 பேர் பலி