ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறும் நிலையில், வேட்பு மனு தாக்கல் ஆனது இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மேனகா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக கையில் கரும்புடன் ஊர்வலமாக வந்த நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஊர்வலமாக நாம் தமிழர் கட்சியினர் வந்தபோது காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்வதாக கூறியதால், நாம் தமிழர் கட்சியினர் பெண் காவல் ஆய்வாளரிடம், ’எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்’ என்றனர். மேலும் ’ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்யும் வீடியோ தருகிறோம்; முடிந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்தில் வேட்பாளர் சின்னத்துடன் வருவதற்கு அனுமதி இல்லை என கூறினர். இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக வந்த நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர் உடன் ஐந்து பேர் மட்டுமே சென்று மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, தனக்கு பல்வேறு வகையில் அச்சுறுத்தல் வருவதாகவும் தான் வெற்றி பெற்று வந்தால் ஈரோட்டில் பிரதான பிரச்சனையாக இருக்கும் சாயக்கழிவு பிரச்சனைக்கு தீர்வு காண போராடுவதாகவும் தெரிவித்தார். மேலும், சாயக்கழிவுகளை வெளியேற்றும் ஆலைகளைக் கட்டுப்படுத்துவதாகவும், மஞ்சள் மாநகரமாக இருந்த ஈரோடு புற்றுநோய் நகரமாக மாறி வருவதாகவும், அதேபோல அரசு பள்ளி மற்றும் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சட்டவிரோதமான பார்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.
சட்டவிரோத மதுபான விற்பனையால் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், மஞ்சள் மாநகரம் வடமாநிலத்தவர்கள் கைக்கு செல்லும் நிலையில் உள்ளது என்றும் கூறினார். மேலும் பள்ளிக்கூடங்கள் கட்ட மக்களிடம் நிதி கேட்கும் அரசு பேனா வைக்க 81 கோடி ரூபாய் செலவு செய்ய எப்படி நிதி வந்தது என சீமான் கேட்டது சரியானது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: தென்காசி காதல் திருமண விவகாரம் - கணவர் பரபரப்பு வாக்குமூலம்