ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் அதிமுகவினர், திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர், தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியினர் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரம்பட்டி, ஜெகநாதபுரம் காலனி உள்ளிட்டப் பகுதியில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் தனது கட்சியினருடன் எஸ்கேசி சாலையில் அமைந்துள்ள காய்கறி கடைக்குச் சென்று விற்பனையில் ஈடுபட்டு நூதன பிரசாரம் மேற்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணைபொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், 'இன்று 4 வார்டுகளில் தொண்டர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகள் கொடுத்த பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் சாலையில் கிடக்கின்றன.
இதை அப்புறப்படுத்திய தேமுதிக வேட்பாளருக்கு பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் நிற்கும் 2 வேட்பாளர்கள் முதியவர்கள். ஒரு வேட்பாளர் சென்னையில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த பகுதி மக்கள் பிரச்னையை கண்டிப்பாக தீர்ப்பார்.
மேலும், ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சியைச் சேர்ந்த மேயர், கவுன்சிலர்கள், அமைச்சர்கள் இங்கு முகாமிட்டு உள்ளார்கள். ஆண்களுக்கு ரூ.1000 பெண்களுக்கு ரூ.500 கொடுத்து பொதுமக்களை அடைத்து வைக்கின்றனர். திமுகவினர் 80 சதவீதம் பணிகள் முடித்தது என சொல்வது சிரிப்பாக உள்ளது. மக்கள் கண்டிப்பாக இந்த தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்' என்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் பேட்டியளித்துள்ளார்.
இதையும் படிங்க:Ungalil Oruvan:'சேறு இருக்கிற இடமெல்லாம் தாமரை மலராது' - பிரதமருக்கு முதலமைச்சர் பதிலடி