மதுரை மாவட்டத்தின் திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தீவிர அரசியலை விட்டு விலகியிருந்த போதிலும், அவ்வப்போது அவர் தெரிவிக்கும் கருத்துகள், பரபரப்புகளை ஏற்படுத்தும்.
இதேபோல் அவரது ஆதரவாளர்களும் அடிக்கடி அதிரடியான சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு, சுற்றுவட்டாரப் பகுதிகளில், மு.க.அழகிரி பேரவை என்கிற பெயரில் அஞ்சா நெஞ்சரே மெளனத்தைக் கலைத்து வெளியே வந்து கலைஞரின் உண்மைத் தொண்டர்களைக் காப்பாற்றிட வா தலைவா என்கிற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இது குறித்து திமுகவினர் காட்டமாக கூறுகையில், “திமுகவில் சலசலப்பையும், பிரிவையும் ஏற்படுத்திடும் வகையில் இதுபோன்ற சுவரொட்டிகள் பரபரப்புக்காக ஒட்டப்படுகின்றன. பரபரப்பு ஓய்ந்த பிறகு சுவரொட்டியை ஒட்டியவர்கள் காணாமல் போவார்கள்” என்றனர்.
கடந்த பல மாதங்களாக அமைதியாக இருந்த அழகிரியின் ஆதரவாளர்கள் தேர்தல் வரும் வேளையில் இதுபோன்ற எதிர்வினைகளை ஏற்படுத்தி வருவது திமுகவினரிடையே கடுங்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.