தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அந்தந்த அரசியல் கட்சியினரின் வேட்பாளர்கள் வாக்களார்களைக் கவர்ந்திழுக்க, பல்வேறு விதங்களில் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட பெருமுனை, கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் திமுகவினர் தேர்தல் பரப்புரை செய்த விதம் வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது.
திமுகவின் தலைமைக்கழகப் பேச்சாளர் சேலம் கோவிந்தன் என்பவர் கோடாங்கி, வேடமணிந்து மக்களிடையே உள்ளாட்சித்தேர்தலுக்காக பரப்புரை செய்தார். மேலும் கோடாங்கி வேடமிட்டு குடுகுடுப்பை அடித்தபடி, மூதாட்டிகளின் குடும்பப் பிரச்னைகளைக் கேட்டறிந்தார்.
ஒரு பக்கம் பார்க்க காமெடியனாக தெரிந்தாலும், 'நல்ல காலம் பிறக்கப்போவுது. திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் உங்கள் குடும்பப் பிரச்னைகள் மட்டுமல்ல. நாட்டுப்பிரச்சனைகளும் தீரும் ' என்று குறி சொல்லி வாக்கு சேகரித்தார்.
'வேலைவாய்ப்பு வேண்டுமா, நல்ல கல்வி வேண்டுமா ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கவேண்டுமா நல்லதொரு ஆட்சி வேண்டும் என்றால், திமுகவிற்கு வாக்களியுங்கள். ஜக்கம்மா சொல்றா' என்று கூக்குரலிட்டார்.
கடவுள் மறுப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, முற்போக்கு சிந்தனையோடு செயல்படக்கூடிய திமுக கட்சியினர், இப்படி கோடாங்கி வேடமிட்டு குடுகுடுப்பை அடித்து வாக்கு சேகரிப்பது பலரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.
இதையும் படிங்க: ' பட்டியலினத்தைச் சேர்ந்த நீ, பொதுத் தொகுதியில் போட்டியிடலாமா? ' - மிரட்டிய தேர்தல் அலுவலர்