தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 1,6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (ஆக.24) முதல் மாநிலம் முழுவதும் 11ஆம் வகுப்புகளுக்கு 2020-2021ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 14 தாலுகாக்களில் உள்ள 1,769 அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவியர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த ஆண்டுகளை விடவும் நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகள் சேர்ந்து கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக கடந்தாண்டு தனியார் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகள்11ஆம் வகுப்பிற்கு அரசுப் பள்ளிகளில் நாடிச் சேர்ந்து கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டி வருவது வெளிப்படையாகவே தெரிகிறது.
கடந்த ஆண்டுகளை விடவும் இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகள் சேர்க்கை எண்ணிக்கை11ஆம் வகுப்பில் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே 10ஆம் வகுப்பில் தனியார் பள்ளியில் படித்து தேர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் கூறுகையில் கரோனா ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்புகளை இழந்து வருவாய் வெகுவாக குறைந்து தங்களது பெற்றோர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு குடும்பத்தை நடத்துவதிலேயே கடும் சிரமத்துடன் அதனை சமாளித்து வருகின்றனர்.
எனவே தங்களது பெற்றோர்களுக்கு மேலும் பாரத்தை வழங்கிட நினைக்காமல் அரசுப் பள்ளிகளில் கல்வி பயில முன்வந்துள்ளதாகவும் படிக்கிற மாணவ மாணவிகள் எந்த சூழலில் படிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருப்பதால் துணிச்சலுடன் அரசுப் பள்ளியை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.