கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நேற்று (13.03.2021) ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பெருந்துறை சாலை, அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா, இடையன்காட்டுவலசு, சம்பத்நகர், மாவட்ட ஆட்சியரக பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில், ஆட்சித்தலைவர் சி.கதிரவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன், “இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு மாவட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் எனவும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டும், மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
அதனடிப்படையில் நேற்று (13.03.2021) ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பெருந்துறை சாலை, அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா, இடையன்காட்டுவலசு, சம்பத்நகர், மாவட்ட ஆட்சியரக பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வணிக வளாகங்கள், தேநீர் கடைகள், உணவகங்கள், திருக்கோயில்கள், காய்கறிக் கடைகள் ஆகிய இடங்களில் முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வந்த உணவகம், கைபேசி அங்காடி உள்ளிட்ட நான்கு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மூன்று கடைகளுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாத 20 தனி நபர்களுக்கு தலா 200 ரூபாய் வீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதனைத் தடுக்க தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் அணிவதையும், கிருமிநாசினி பயன்படுத்துவதையும் சமூக இடைவெளி கடைபிடிப்பதையும் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு வரும் ஒவ்வொரு நபருக்கும் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்பு அனுமதிக்க வேண்டும்.
மேலும் வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடி, உணவகம், தேநீர் விடுதிகள், காய்கறி அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு எப்பொருளையும் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படுவதோடு, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே பொதுமக்கள் வணிக வளாகங்கள், அங்காடிகள், காய்கறி சந்தை உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மேற்கண்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல் தொடர்ந்து அலட்சியமாக இருந்தால், மீண்டும் முழு ஊடரங்கு நிலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அரசின் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு நலன் கருதி முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநகர நல அலுவலர் முரளிசங்கர் உள்பட தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ’ஒற்றுமை இல்லாததே தோல்விக்கு காரணம்’ - அமைச்சர் சி. வி. சண்முகம்