மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் தேர்வுசெய்யப்பட்ட ஈரோடு மாநகராட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டங்கள், சாலை வசதிகள், வணிக வளாகக் கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுவருகின்றன.
அதேபோல் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை மறுசுழற்சிசெய்து உரங்களாக மாற்றும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு நடமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் இளங்கோ நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "மத்திய அரசு சார்பில் 2017ஆம் ஆண்டு சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் தேர்வுசெய்யப்பட்ட பத்து மாநகராட்சியில் ஈரோடு மாநகராட்சியும் ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சியில் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்திய அளவில் சீர்மிகு நகரம் திட்டப்பணிகளை சிறப்பாகச் செயல்படுத்துவதில் சிறந்த மாநகராட்சியாக ஈரோடு தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த சில நாள்களுக்கு முன்னர் பரிசு வழங்கப்பட்டது.
மத்திய அரசு இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து அனைத்து அரசுத் துறைகளிலும் கருத்துகேட்டு அனுப்பச் சொல்லியதன்பேரில் கல்வித் துறை, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறைகளில் கருத்துகள் பெறப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம்.
தற்போது, மாநகராட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் செயல்படுத்தும்முறை குறித்தும் அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்தும் மக்களிடம் கருத்து கேட்டு அதனைப் பதிவுசெய்து அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
விரைவில், இது குறித்த பொதுமக்களின் கருத்துக் கேட்புக்கூட்டம் நடைபெறும் அந்தக் கூட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்து சீர்மிகு நகரம் திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்திட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் - ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு திறப்பு