ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்புப் பணிகள், கண்காணிப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்நிலையில் ஈரோடு ரயில்வே நிலையப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சமயத்தில், சாலையோரத்தில் வசித்துவரும் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வ அமைப்பினர் சிலர் உணவுப் பொருள்களை வழங்கிவந்தனர். இதையடுத்து, இந்தப் பொருள்கள் அனைத்தும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று வழங்கப்படுகிறதா என விசாரணை நடத்தினார்.
அப்போது மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக் கடிதம் இன்றி, தன்னார்வ அமைப்பினர் யாருக்கும் நிவாரணப் பொருள்களை விநியோகிக்கக் கூடாது எனவும், சில பகுதிகளில் தன்னார்வ அமைப்பினர் வழங்கிய உணவுப் பொருள்கள் ஒவ்வாமை ஏற்படுத்தியதாகவும், இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனுமதியின்றி உணவு வழங்கியவர்களை எச்சரித்தார்.
முன்னதாக ஈரோடு-நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், மாவட்ட எல்லைப் பகுதிகளைக் கடக்கும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி முறையாகத் தெளிக்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். மேலும் லாரியில் ஓட்டுநர், உதவியாளர் ஆகிய இருவர் மட்டுமே பயணம் செய்திட வேண்டும் எனவும் தகுந்த இடைவெளிகளை கடைப்பிடிக்கவில்லை எனில், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.
இதையும் படிங்க:கடையை திறந்தால்... ஆணையரின் எச்சரிக்கை!