கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் நடமாடிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், "ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, 82 பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்களில் 99 விழுக்காடு கண்டுபிடித்து, அவர்களுக்குப் முழு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவர்களுடன் தொடர்பிலிருந்த 45 நபர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களாலேயே இதுவரை கரோனை வைரஸ் பரவியுள்ளது. இனிமேல் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பொது மக்களிடமிருந்து கரோனா வைரஸ் பரவ இனி வாய்ப்பில்லை. தற்போது அவர்கள் அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, விவசாயிகள் சாகுபடி செய்த வேளாண் பொருட்களை தாங்களே அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு செல்லவும், வியாபாரிகள் வந்து அதனை வாங்கிச் செல்லவும் அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க கிராமங்களில் நடமாடும் காய்கறி அங்காடிகள் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட வாய்க்கால் ரோடு, ஐந்து சாலை சந்திப்பு, கருமாயாள் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் நடமாடியதால், அங்குள்ள 1,880 வீடுகளில் வசிக்கும் 7,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.