ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலானது அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, பெருந்துறை, சென்னிமலை, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் அமைதியான முறையில் நடைபெற்றது.
தேர்தல் நடைபெற்று வரும் பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொட்டிபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி. கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கதிரவன், "தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விழுக்காட்டைக் காட்டிலும் இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரிக்கும். தேர்தலைப் புறக்கணித்த நினைத்தவர்களும் மனம் மாறி வாக்களித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
மேலும், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புங்கர் ஊராட்சி ஒன்றாவது வார்டில் உள்ள சுஜில் குட்டை மக்கள் தேர்தலைப் புறக்கணித்திருந்தனர். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட அய்யம்பாளையம் ஒன்றாவது வார்டில் வார்டு வரைமுறையால் ஏற்பட்ட குழப்பத்தால் தேர்தலை சிறிது நேரம் புறக்கணித்திருந்தனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!